நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகள்

நீங்க தவறவிட்ட முக்கிய செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

செப். 1 முதல் பஸ்கள் ஓடும்

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் அரசு, தனியார் பஸ்கள் ஓடும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 15,000 பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் மட்டும் 3,500 பஸ்கள் ஓடும் என்று போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதியில்லை

மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதை பின்பற்றி தமிழகத்திலும் செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிக்கிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து

நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை

செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களை திறக்க அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல தமிழகத்தில் செப்டம்பர் மாதம் திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை. படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்து வழிபாட்டுதலங்களையும் திறக்க அனுமதி

தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்கலாம். இதற்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும்.

இதன்மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன் வழிபாட்டு தலங்களின் சன்னதிக்குள் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

பொதுமக்களின் தரிசனம் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

செப். 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை

நாடு முழுவதும் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவையை படிப்படியாக தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லி-மெட்ரோ-ரயில்
டெல்லி-மெட்ரோ-ரயில்

இதன்படி சென்னையில் வரும் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும். இதற்கான நிலையான வழிகாட்டு நெறிகள் வகுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஞாயிறு ஊரடங்கு ரத்து

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கை அமல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

144 தடையுத்தரவு தொடரும்

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் 144 தடையுத்தரவு தொடரும். 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக அமல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உடற்பயிற்சி பூங்காக்கள் திறப்பு

தங்கும் வசதியுடன்கூடிய ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிகளை பின்பற்றி செயல்படலாம். அனைத்து உடற்பயிற்சி பூங்காக்களை திறக்கலாம். விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆன்மிகம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை

செப்டம்பர் 21 முதல் சமூக, கல்வி, விளையாட்டு, கேளிக்கை, கலாச்சாரம், ஆன்மிகம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமூக, மதம், அரசியல், கேளிக்கை, கல்வி விழாக்களை நடத்த தடை நீடிக்கிறது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

அம்பத்தூர் மகளிர் ஐடிஐ-ல் சேரலாம்

அம்பத்தூரில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15-க்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். தொடர்புக்கு 94444 51878, 91761 97370

ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு

திறமையற்ற ஊழியர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மத்திய அரசு துறைகளில் களையெடுக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இதற்காக ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு இந்த ஆண்டில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரு கணக்கெடுப்புகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடண் தவணை சலுகையை நீட்டிக்க வாய்ப்பில்லை

கொரோனா வைரஸால் பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளது. இதன்காரணமாக கடன் தவணை செலுத்த 6 மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகை ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அரசு பள்ளிகளில் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் கூடுதலாக 1,72,000 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும்
அரசு பள்ளிகளில் சேரலாம்

அரசு பள்ளிகளில் 1,6, 9, 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சில தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். எனவே அரசுப் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலும் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு
ஆன்லைனில் விண்ணப்ப பதிவு

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. www.gct.ac.in, www.tn.mbamca.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

டான்செட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் முறைப்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

பொதுமுடக்கம் மீறல்: இதுவரை 21.9 கோடி அபராதம் வசூல்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.21.9 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில்
செப். 7 முதல் நேரடி விசாரணை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து வழக்குகளும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் 6 அமர்வுகளில் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

அனைத்து தேர்தல்களுக்கும்
ஒரே வாக்காளர் பட்டியல்

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது. இந்நிலையில் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்

தமிழகம் முழுவதும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் 95 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக்கு 3,15,000-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கான தரவரிசை, தேர்வு பட்டியல் அந்தந்த கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த28-ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை செப். 4 வரை நடைபெற உள்ளது. கல்லூரி கல்வி இயக்கக உத்தரவின்படி செப்.1 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

விரைவில் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை

கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள் தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *