முக்கிய செய்திகள்.. சில வரிகளில்…

முக்கிய செய்திகள்.. சில வரிகளில்… தொகுக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய அக். 31 வரை அவகாசம் நீட்டிப்பு

சிறு வணிக நிறுவனங்கள் தங்கள் மாத வருவாய்க்கு ஏற்பவும், மாதம்தோறும் நிலையான வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ஒரு முறையும் ஜிஎஸ்டி ஆர் 4 எனும் கணக்கு படிவத்தை தாக்கல் செய்ய வேம்டும். இதற்கான கால அவகாசம் கடந்த 31-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் கால அவகாசம் வரும் அக். 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைகளில் வரும் 7-ம் தேதி முதல் 8 அமர்வுகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் வரும் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேசிய குடற்புழு நீக்க முகாம்

தேசிய குடற்புழு நீக்க முகாம்கல் வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், துணை சுகாதார மையங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் அளிக்கலாம். பெற்றோர் தங்களது புகார்களை feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அணுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொழில் வரியை செப். 30-க்குள் அபராதமின்றி செலுத்தலாம்

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட வரிகளை கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும்.

கொரோனா நெருக்கடியால் வரிகளை அபராதம் இன்றி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த வரிகளை இதுவரை செலுத்தாதவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அபராதமின்றி செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தற்கொலைகளில் சென்னை முதலிடம்

தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

மேலும் மாநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 2,500 பஸ்கள் இயக்கம்

கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் கூடுவாஞ்சேரி, திருமழிசை, பூந்தமல்லி, கோவளம், செங்குன்றத்தை எல்லையாக கொண்டு 2,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் பஸ் பாஸை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

திருமழிசை காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் செய்யப்படாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

எனினும் திருமழிசை காய்கறி சந்தைக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடரும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பிஎட், எம்எட் படிப்புகளில் சேரலாம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை கடந்த 2-ம் தேதி தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் www.tamiluniversity.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். செப். 30-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தொடர்புக்கு 04362 226720

முக்கிய செய்திகள்.. சில வரிகளில்… தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.