முக்கிய செய்திகள்.. நறுக்மொறுக்… ஆக சுருக்கமாகவும் தெளிவாகவும் எடிட் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனை விதிக்கச் செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிவால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிமீறும் நபர்களுக்கு ரூ.500, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை கடைபிடிக்காவிட்டால் ரூ.5,000, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்
ஜேஇஇ நுழைவுத் தேர்வு கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதியும் வரும் 13-ம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை தள்ளிவைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஆளும் 6 மாநிலங்களின் அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக பூங்காக்களில் யோகா, உடற்பயிற்சி கூடம்
தமிழகத்தில் போதிய இடவசதி உள்ள 147 பூங்காக்களில் உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உடற்பயிற்சி கூடங்களில் 10 விதமான கருவிகள் நிறுவப்பட உள்ளன. இந்த திட்டத்தில் சென்னையின் பல்வேறு இடங்களில் யோகா மையம், உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
சத்துணவு மாணவர்களுக்கு 10 முட்டைகள்
சத்துணவு திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பு மாதம் முழுவதும் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு 10 முட்டைகளும் வழங்கப்படும் என்று சமூக நலன், சத்துணவு திட்ட துறை முதன்மைச் செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்
செப்டம்பர் 7 முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. இதன்படி தமிழக அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். போக்குவரத்து கழக அலுவலகங்களில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
பி.எப். பென்ஷனிலும் கை வைக்கிறது மத்திய அரசு
தற்போதைய திட்டத்தின்படி பி.எப். பென்ஷன் பெற, ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப அல்லாமல் குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படையில் பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில் ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவோ அதற்கேற்ப அவருக்கான பென்ஷன் தொகையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் குறைந்த ஊதிய பிரிவினர் பாதிக்கப்படுவார்கள்.
குடிநீர், கழிவுநீர் புகார்களை செயலியில் தெரிவிக்கலாம்
சென்னை குடிநீர் வாரியத்தில் 9.72 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி METRO WATER என்ற செயலியை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி வாயிலாகவும் குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம். 4567 4567 என்ற தொலைபேசி எண்ணிலும் chennaimetrowater.tn.gov.in இணையதளம் வாயிலாகவும் புகார்களை அளிக்கலாம்.
மாற்றுத்திறனாளி பயண அட்டை டிசம்பர் வரை நீட்டிப்பு
2019-20-ம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பஸ் பயண சலுகை அட்டை ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. கொரோனா காலக் கட்டத்தில் இந்த பயண அட்டையை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை புதுப்பிக்காமல் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது
புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரி
சில பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்தகைய பள்ளிகள் குறித்து matricomplaintceotir@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
40%-க்கும் மேல் கட்டணம் வசூலிக்கும்
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
தனியார் பள்ளிகள் இப்போதைக்கு 40 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி 40 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்ககும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்.. நறுக்…மொறுக்… தொகுப்பு இத்துடன் நிறைவு பெறுகிறது.