முக்கிய செய்திகளின் தொகுப்பு…

முக்கிய செய்திகளின் தொகுப்பு … இந்த தொகுப்பில் அனைத்து முக்கிய செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வகுப்பு கட்டாயமில்லை

ஆன்லைன் வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. ஆன்லைன் கல்வி தொடர்பான புகார்களை மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் grievanceadressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபம், ஓட்டல்களுக்கு சான்று அவசியம்

தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், ஓட்டல்களை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று அவசியம்.

இதுதொடர்பான முழுமையான விவரங்களை www.tnpcb.gov.in இணையதளம் மற்றும் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆம்னி பஸ்கள் 30-ம் தேதி வரை ஓடாது

ஆம்னி பஸ்களில் 100 சதவீத பயணிகளை அனுமதிக்க வேண்டும். ஏசி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும். 6 மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி வரை ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆம்னி பஸ்
ஆம்னி பஸ்

தமிழக கோயில்களில் தரிசன முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இலவச, சிறப்பு தரிசன முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் முன்பு ஆதார் அட்டை நகல் மற்றும் முன்பதிவு டிக்கெட்டை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை. பருவத் தேர்வு செப். 21-ல் தொடங்குகிறது

சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வு செப். 21 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். அக். 14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டணம் செலுத்த செப். 30 வரை அவகாசம்

தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதில் 75 சதவீதத்தை இந்த ஆண்டு வசூலிக்கலாம்.

அதில் முதல் தவணையாக 40 சதவீதத்தை வசூலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. 40 சதவீத கட்டணத்தை செலுத்துவதற்கான காலஅவகாசம் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கண்தானம் செய்ய புதிய இணையதளம் தொடக்கம்

தமிழகத்தில் கண் தானம் செய்ய விரும்புவோர், பதிவு செய்வதற்காக https://hmis.tn.gov.in/eye-donor/ என்ற இணையதளத்தை முதல்வர் பழனிசாமி கடந்த திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை முதல்வர் அளித்தார்.

வங்கிக் கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம்

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஆட்களை அனுப்பி பணம் கேட்பதற்கும் மிரட்டுவதற்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

வங்கிக் கடனை வசூலிக்க வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால் காவல் கட்டுப்பாட்டு அறை 100-ல் புகார் அளிக்கலாம். அந்த நபர் மீதும், வங்கி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது

சென்னையில் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலை தடுத்த அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.

வைரஸ் அச்சுறுத்தலால் மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

மக்களின் புகார்களை விசாரிக்க 353 வாகனங்களில் ரோந்து சுற்றும் போலீஸார்

திருட்டு, அடிதடி, சண்டை சச்சரவுகள் குறித்து 100-க்கு வரும் புகார்கள் குறித்து விசாரிக்க சென்னையில் 353 வாகனங்களில் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர். இதன்மூலம் சென்னையில் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு உரிமத்தை டிச. 31 வரை புதுப்பிக்கலாம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய பிறகு காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்க டிசம்பர் 31 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி முதல் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

விரைவு பஸ், சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து திருச்சி, திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு விரைவு பஸ் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் 1000 விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட்டன.
இதேபோல சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்களின் சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

5 மாதங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் திறப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றமும் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டிருந்தன. 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றமும் கீழமை நீதிமன்றங்களும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 அமர்வுகளில் நேரடி விசாரணை நடைபெறுகிறது.

கடைகள், ஓட்டல்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும்

தமிழக முதல்வர் பழனிசாமியை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது கொரோனாவில் உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கடைகள், ஓட்டல்களை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு முதல்வரிடம் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகளின் தொகுப்பு … இத்துடன் நிறைவடைகிறது.