விடுபட்ட முக்கிய செய்திகள்

விடுபட்ட முக்கிய செய்திகள் இங்கே சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனைக்காக
2,000 மினி கிளீனிக்குகள்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த கிளீனிக்குகளில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் இடம்பெறுவார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளீனிக்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை

சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு அவர்களது பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்படும்.

பிறந்த நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு மற்ற போலீஸார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புறநகர் மின்சார ரயில் எப்போது இயக்கப்படும்?

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

2,800 எம்டிசி பஸ்களில் கண்காணிப்பு கேமரா

சென்னையில் 673 வழித்தடங்களில் 3,600-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சென்னையில் இயக்கப்படும் சுமார் 2,800 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போக்குவரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது.

முதல்கட்டமாக பூந்தமல்லியில் இருந்து பிராட்வே செல்லும் பஸ்ஸில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மே மாதம் வரை சென்னையில் தடையின்றி குடிநீர்

சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டு 1,264 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இந்த ஆண்டு 52,225 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.

இந்த கொள்ளளவை கணக்கில் கொண்டு வரும் மே மாதம் வரை சென்னை மக்களுக்கு தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

செப். 21 முதல் 9-12-ம் வகுப்புகளை தொடங்க அனுமதி

வரும் 21-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பை தொடங்க மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி டெல்லி, பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் வரும் 21-ம் தேதி முதல் 9-12-ம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளன.

காஸ் சிலிண்டர் மானியம் படிப்படியாக குறைப்பு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் காஸ் மானியம் ரூ.200 வரை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.100 மட்டுமே மானியமாக வழங்கப்பட்டது. தற்போது ரூ.24 மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

செப். 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது. மொத்தம் 3 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22-ம் தேதி தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மடிக்கணினி, கணினி, ஸ்மார்ட் போன், டேப் போன்றவற்றை இணையதளம், கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தி.நகர் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறப்பு

தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளில் 500 மோட்டார் சைக்கிள்கள், 200 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

இலவச சேர்க்கை குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியிட உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவ, மாணவியருக்கு ஒதுக்க வேண்டும்.

இந்த இலவச சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணையை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தமிழக அரசு விரிவான செய்தியாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுபட்ட முக்கிய செய்திகள் தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *