முக்கிய செய்தித் துளிகள்… சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் விரைவில் பயோ-மெட்ரிக்
தமிழக ரேஷன் கடைகளில் ஆதார் அடிப்படையில் விரல் ரேகையை உறுதி செய்து பொருள்களை வழங்கும் பயோ-மெட்ரிக் நடைமுறை விரைவில் அமல் செய்யப்பட உள்ளது. ஒருவேளை விரல் ரேகை தோல்வி அடைந்தால் செல்போன் பாஸ்வேர்டு மூலம் பொருள்களை பெறலாம் என்று உணவுத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) தினகரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த 2 போலி பேஸ்புக் கணக்குகளையும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கினர். காவல் உயரதிகாரிகள் பெயரில் உருவாக்கப்படும் போலி சமூகவலைதள கணக்குகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோயில்களில் திருமணம் நடத்தப்படாது
தமிழத்தின் முக்கிய கோயில்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் தடுக்க நடவடிக்கையாக கோயில்களில் இப்போதைக்கு திருமணம் நடத்த அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு 24-ம் தேதி தொடக்கம்
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒரு மணி நேர தேர்வாக ஆன்லைனில் நடைபெறுகிறது.
இது அப்ஜெக்டிவ் தேர்வாக இருக்கும். 40 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது, மாணவர்களுக்கான ஐடி, பாஸ்வேர்டு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இத்துடன் முக்கிய செய்தித் துளிகள் நிறைவடைந்தன.