இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமைகளில் திருப்பதிக்கு தனியார் ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தனியார் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி சனிக்கிழமைதோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படும் தனியார் ரயில் அன்றிரவு 10.30 மணிக்கு திருப்பதியை அடையும்.
மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணிக்கு புறப்பட்டு பகல் 12,50 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியார் ரயில் வந்தடையும். இந்த ரயில் அரக்கோணம், ரேணிகுண்டா நிறுத்தங்களில் நின்று செல்லும். இதுதகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயிலில் முக கவசம் அணியாவிட்டால் பயணிகளுக்கு ரூ.200 அபராதம்
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டம்
ரயில் நிலையங்களை மேம்படுத்த பயணிகளிடம் இருந்து பயனாளர் கட்டணம் வசூலிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே வாரிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
தனியார் நிறுவனங்களே ரயில் கட்டணத்தை நிர்ணயிக்கலாம்
நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க அனுமதி அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தனியார் ரயில் கட்டணம் குறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். “தனியார் நிறுவனங்கள் ரயில் சேவையை தொடங்கும்போது, அந்த நிறுவனங்களே ரயில் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.
4 மாதங்களில் 66 லட்சம் பேர் வேலையிழப்பு
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாதங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த 66 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் சுயதொழில் முனைவோர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களையும் கணக்கிட்டால் வேலையிழந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்.
அரசு ஊழியர் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு
தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை இடமாறுவதல் செய்யப்படுவது வழக்கம். தற்போதைய கொரோனா சூழ்நிலையால் 2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் பொதுவான பணியிட மாறுதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி பாடத்திட்டம் 40% குறைப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிபுணர் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த கல்வியாண்டில் பள்ளி பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் அக்டோபர் முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சத்துணவு திட்ட மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள்
சத்துணவு திட்ட மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மாதந்தோறும் அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சத்துணவு திட்ட மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் 10 முட்டைகளும் வழங்கப்படுகின்றன.
பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் பி.இ. 2-ம் ஆண்டில் சேரலாம்
டிப்ளமா மற்றும் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்தவர்களை பொறியியல் (பிஐ) இரண்டாம் ஆண்டில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்க்கலாம். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 1,193 செல்போன்கள் மீட்பு
சென்னையில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 1,193 செல்போன்கள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1.2 கோடியாகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பொதுமக்களிடம் செல்போன்களை வழங்கினார்.
இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.