முக்கிய செய்தித் துளிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
எல்லா துறை மனுக்களையும் ஒரே தளத்தில் அளிக்க திட்டம்
தமிழக அரசின் வெவ்வேறு அரசு துறைகள் தனித்தனியே மக்கள் குறைதீர் மையங்கள், இணையதளங்களை செயல்படுத்தி வருகின்றன.
மக்களின் அலைச்சலை தவிர்க்க ஒரே இடத்தில் மனுக்களை அளிக்க, “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர் மேலாண்மை’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நெட் தேர்வு தேதி மாற்றம்
பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு செப்டம்பர் 16 முதல் 25 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநாளில் ஐசிஏஆர் தேர்வு வருவதால் நெட் தேர்வு செப்டம்பர் 24 முதல் நடத்தப்படும்.
புதிய தேர்வு கால அட்டவணை, விவரங்களை https://nta.ac.in/ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
கொரோனாவால் இறந்தவர் உடலை தகனம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டு சிறை
பொது சுகாதார சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி கொரோனாவால் இறந்தவர் உடலை புதைப்பதை, தகனம் செய்வதை தடுக்கும், இடையூறு செய்யும் நபருக்கு ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை
தமிழகம் உள்ளிட்ட 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1.51 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது.
ஆனால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை என்று நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருள்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
கடந்த 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதன்படி தானிய வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு உள்ளிட்டவற்றை இருப்பு வைப்பதில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை
முதியோர் பராமரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
“மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் புகார் அளித்தால் 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்தித் துளிகள் தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.