முக்கிய செய்தித் துளிகள்

முக்கிய செய்தித் துளிகள் இங்கு சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன.

3,501 நடமாடும் ரேஷன் கடைகள்

அனைத்து மாவட்டங்களிலும் 3,501 நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி வரும் 21-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் சுமார் 5.36 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி செப். 21-ம் தேதி முதல் 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த நாட்களில் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படாது. எனினும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

வண்டலூர், பல்லாவரத்தில் மேம்பாலங்கள் திறப்பு

வண்டலூர்-கேளம்பாக்கம்-மாம்பாக்கம் சாலை சந்திப்பில் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி கடந்த வியாழக்கிழமை திறந்து வைத்தார். மேலும் பல்லாவரம் ஜிெஸ்டி சாலையுடன் சந்தை சாலை, குன்றத்தூர் சாலை சந்திப்புகலை இணைக்கும் வகையில் ரூ.80.74 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.

வேளாண் மசோதாக்களை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா

வேளாண் துறை சார்ந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதா பெரிய விவசாயிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளன என்று குறு, சிறு விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 3 மசோதாக்களை எதிர்த்து அகாலிதளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணம்

சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில் இதுவரை 14,633 பேருக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நிவாரண உதவி பெறாத சாலையோர வியாபாரிகள், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் வழங்கலாம்.

அவர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோயம்பேடு உணவு தானிய கடைகள் திறப்பு

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்பட்ட உணவு தானிய மொத்த விற்பனை கடைகள் நான்கரை மாதங்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. வரும் 28-ம் தேதி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது. தற்போது காய்கறி மொத்த சந்தை திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.

4 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி, புதுக்கோட்டை, குமாரபாளையம் உள்ளிட்ட 4 இடங்களில் செயல்பட்ட அரசு பி.எட். கல்லூரிகளில் 2020-21-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடை விதித்துள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை
இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்

கொரட்டூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே கிராசிங்கில் ரூ.21.96 கோடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இந்த மாத இறுதிக்குள் சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் மேம்பால பணி அடுத்த மாதம் நிறைவடையும்

கொளத்தூரில் ரூ.41 கோடி செலவில் வலதுபுற மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்தித் துளிகள் இத்துடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *