இன்டேன் சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இன்டேன் சிலிண்டர் பதிவு செய்ய 81240 24365 என்ற எண் அமலில் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 77189 55555 என்ற ஒரே தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும் இந்த எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்றும் இன்டேன் நிறுவனம் அறிவித்தது.
எனினும் நவம்பர் 1-ம் தேதிக்கு முன்பாகவே புதிய தொலைபேசி எண் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக பழைய எண் செயல்படவில்லை. புதிய எண்ணில் மட்டுமே சிலிண்டர் பதிவு செய்ய முடிகிறது. புதிய எண்ணை அழைக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
இதற்கு முன்பு இன்டேன் தானியங்கி தொலைபேசி சேவையில் ‘கஸ்டமர் எண்’ கூறப்படும். தற்போது அதற்குப் பதிலாக ஐ.டி. எண் கூறப்படுகிறது. இது 16 இலக்க எண்ணாகும். இந்த எண் பழைய ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே குழப்பம் அடைய வேண்டாம். வழக்கம்போல சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்று இன்டேன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.