திருட்டு பைக்குகளில் வீலிங்; சிறையில் அடைக்கப்பட்ட பைக் ரேஸர்

பறிமுதல் செய்யப்பட்ட பைக்
சென்னையில் விலை உயர்ந்த பைக்குகளைத் திருடி அதில் வீலிங் செய்து ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரின் பின்னணியை இந்த செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.
சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசனின் விலை உயர்ந்த பைக் கடந்த ஆண்டு திருட்டு போனது. இதுகுறித்து அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக விசாரித்தபோது ஓட்டேரி, அயனாவரம், டி.பி.சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, நீலாங்கரை, திருமுல்லைவாயல் உள்பட சில காவல் நிலையங்களில் விலை உயர்ந்த பைக்குகள் தொடர்ந்து திருட்டு போனது போலீசாருக்கு தெரியவந்தது.

அதனால் கூடுதல் கமிஷனர் அன்பு உத்தரவின்பேரில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி மேற்பார்வையில் உதவி கமிஷனர் துரையின் தனிப்படை போலீசார் பைக் திருடர்களைத் தேடிவந்தனர். இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையில் தலைமைக் காவலர் சரவணக்குமார், பிரதீப், காவலர் திருக்குமரன் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு இளைஞர்கள்தான் விலை உயர்ந்த பைக்குகளைத் திருடுவது தெரிந்தது. அதனால் அவர்களை தேடிவந்த சூழலில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவு மூலம் பைக் திருடர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.

உடனடியாக அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். விசாரணையில் ஓட்டேரி, பிரிக்ளின் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகனும் அவரின் நண்பரான சூளை, வி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த சோமேஷ் (21) என்பவரும் சேர்ந்து விலை உயர்ந்த பைக்குகளைத் திருடியது தெரியவந்தது. இருவரிடமும் விசாரித்தபோது திருடிய பைக்குகளை விற்காமல் நண்பர்களுக்கு கிஃப்ட்டாக கொடுத்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்கிற பாலா, ஒரு பைக் ரேஸர். அவர் எந்த வேலைக்குச் செல்லாமல் விலை உயர்ந்த பைக்களை மட்டும் குறி வைத்து திருடி வந்திருக்கிறார். அந்த பைக்குகளில் பாலாவும் அவரின் நண்பரான உணவு டெலிவரி வேலை செய்து வரும் சோமேசும் வீலிங் செய்து (சாகசம்) அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரீல்ஸாக பதிவு செய்து வந்திருக்கிறார்கள். விலை உயர்ந்த பைக்குகளில் பாலா, வீலிங் செய்து நண்பர்களிடம் கெத்து காட்டி வந்திருக்கிறார்.

அதனால் பாலாவின் பைக் ரீல்ஸ் வீடியோக்களுக்கு அதிகளவில் லைக்ஸ்கள் வந்திருக்கின்றன. இவர் திருடிய பைக்குகளை யாருக்கும் விற்காமல் அதை கிஃப்ட்டாக தன்னுடைய நண்பர்களுக்கு கொடுத்து வந்திருக்கிறார். அதனால்தான் பாலாவை போலீசாரிடம் சிக்காமல் இருந்திருக்கிறார். மேலும் இவர் திருட்டு பைக்குகளுக்கு போலியாக ஆவணங்களையும் தயாரித்து அதை பயன்படுத்தி போலீசாரிடமிருந்து தப்பித்து வந்திருக்கிறார்.