சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைக்காமல் நகை, பணத்தை திருடிய வழக்கில் ரீல்ஸ் குயின் அனீஷ்குமாரி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி (37). பிளம்பராக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாலதி (31). இந்த தம்பதியினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திநகருக்குச் சென்றனர். அதற்காக வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மறைத்து வைக்கும் வாஷிங்மிஷினில் வைத்தனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பி, வாஷிங்மிஷினிலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்தனர்.

இந்தநிலையில் கடந்த 11-ம் தேதி மாலதி, பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் செல்ல பீரோவைத் திறந்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த கம்மல், ஜிமிக்கி, சிறிய செயின் உள்பட 3 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டுப் போயிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த மாலதி, நகைகள் பணம் திருட்டு போனது குறித்து கணவர் சபாபதியிடம் தெரிவித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வீடு முழுவதும் தேடினர். ஆனால் நகை, பணம் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாலதி, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் நகை, பணம் திருட்டு போனது குறித்து புகாரளித்தார். உடனடியாக போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது கதவின் பூட்டை உடைக்காமல் சாவி மூலம் திறந்து திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் தெரிந்தவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்தனர். அதனால் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு போன தினத்தன்று நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் மார்டன் டிரஸ் அணிந்து இளம்பெண் ஒருவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர் யார் என்று போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்தது மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த அனீஷ்குமாரி எனத் தெரியவந்தது. சிசிடிவியில் பதிவான பைக்கும் அனீஷ்குமாரியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கும் ஒன்று என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அனீஷ்குமாரியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தான்,சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். மேலும் என்னுடைய ரீல்ஸ் வீடியோஸ்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதன்மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. அதனால் நான் ஏன் திருட வேண்டும் என போலீசாரிடமே கேள்விகளைக் கேட்டார். பின்னர் போலீசார், அனீஷ்குமாரியிடம் சிசிடிவி கேமரா பதிவுகளைக் காண்பித்து விசாரணை தொடங்கினர். ஏன் அன்றைய தினம் நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கை ஓட்டி சென்றீர்கள், எதற்காக சபாபதியின் வீட்டுக்கு வந்தீர்கள் என அடுத்து கேள்விகளைக் கேட்டபோது ரீல்ஸ் குயினான அனீஷ்குமாரி பதிலளிக்க முடியாமல் திணறினார். அதன்பிறகு சபாபதி வீட்டில் நகை, பணத்தை திருடியதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
திருடிய நகைகள் குறித்து போலீஸார் விசாரித்தபோது, அவைகளை பத்திரமாக ஃபிரிட்ஜ்ஜில் வைத்திருக்கிறேன் என்று எடுத்துக் கொடுத்தார். அதை போலீசார், தங்களின் செல்போன் வீடியோவாக எடுத்துக் கொண்டனர். விசாரணைக்குப்பிறகு ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமான அனீஷ்குமாரியை போலீஸார் கைது செய்தனர். அப்போது தனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் தன்னுடைய போட்டோஸ்களை வெளியிட வேண்டாம் என்று அனீஷ்குமாரி, போலீசாரிடம் கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.
ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அனீஷ்குமாரி, சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். அனீஷ்குமாரி மீது ஏற்கெனவே பைக் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.