சென்னையில் நடந்து வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இதுவரை 125 ஆசிரியர்கள் மயக்க மடைந்திருக்கிறார்கள்.
தமிழக அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தப்பிறகும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
அதனால் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஏழு நாள்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ அலுவலகத்தில் தொடங்கியது. ஏராளமானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள் போராட்டத்தின் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றம் பட்டதாரி ஆசிரியர் நலசங்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏழு நாள்களில் நடந்த போராட்த்தில் 125ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போராட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் ஆசிரியர்களில் சிலர் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு மட்டும் உணவு கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் பட்டினியாகவே இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தையடுத்து டி.பி.ஐ அலுவலக வளாகத்தில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் மயக்கமடைந்தால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பா.ம..க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.