பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் யூடியூப்பர் பூர்ணிமா. அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசனை இந்தத் தடவையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ், எழுத்தாளர் பவா செல்லத்துரை, சரவண விக்ரம், நடிகை விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அனன்யா ராவ், மணி சந்திரா, நடிகர் யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணுவிஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ரவீனா, அக்ஷயா, உதயகுமார், வினுஷா தேவி என 18 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
வழக்கமாக பிக்பாஸ் சீசனில் ஒரு வீடு இருக்கும். ஆனால் இந்தத் தடவை இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை சின்ன வீடு என்று சொல்கிறார்கள். பிக்பாஸ் சீசனின் கேப்டன் சொல்படி நடக்காதவர்கள் சின்ன வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் சமையல் வேலையோடு பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பிக்பாஸ் சீசன் தொடங்கி ஒருவாரம் கடந்தநிலையில் யூடியூப்பரான பூர்ணிமா ரவிச்சந்திரன் தன்னுடைய 28-வது பிறந்த நாளை பிக்பாஸ் வீட்டில் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். இதற்காக பிக்பாஸ் வீட்டிலேயே கேக் தயாரிக்கப்பட்டது. பூர்ணிமா சக போட்டியாளர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.