`உங்களின் போட்டோவையும் ப்ரோப்பலையும் பார்த்தேன். எனக்கு பிடித்திருப்பதால் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என ஆசைவார்த்தைகளை அள்ளி வீசி பணத்தை பறிக்கும் நைஜீரியா கும்பலைச் சேர்ந்த இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான், மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அப்போது ஆஷிஷ் சன்னார் என்பவர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அந்த நபர் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பினார். அப்போது எனக்கு விலைஉயர்ந்த பரிசு பொருளை அனுப்பி வைத்திருப்பதாக கூறினார். அதோடு என்னை திருமனம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்தச் சூழலில் அவர் அனுப்பிய விலை உயர்ந்த பரிசு பொருள், புதுடெல்லி விமான நிலையத்திலிருப்பதாகவும் அதை பெற 10,33,000 ரூபாயை அனுப்பும்படி சுங்கத்துறை அதிகாரியைப் போல ஒருவர் என்னிடம் போனில் பேசினார்.
அதை உண்மையென நம்பி அந்த அதிகாரி கூறிய பலவேறு வங்கி கணக்குகளுக்கு அந்தத் தொகையை அனுப்ப வைத்தேன். அதன்பிறகு பரிசு பொருள் வரவில்லை. என்னைத் தொடர்பு கொண்ட சுங்கத்துறை அதிகாரி மற்றும் திருமணம் செய்து கொள் விரும்பியவர் என அனைவரின் செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பிறகே நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்தப் பெண் அனுப்பிய வங்கி கணக்குகளின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். பின்னர் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்ட செல்போன் நம்பர்களையும் ஆய்வு செய்தனர். விசாரணையில் பீகார், மத்திய பிரதேசம், தெற்கு டெல்லி ஆகிய இடங்களில் வசிப்பவர்களின் வங்கி கணக்குகள் எனத் தெரியவந்தது. செல்போன் நம்பர்கள் நொய்டா உத்தரபிரதேசம் பகுதியில் சிக்னல் காட்டியது. அதனால் சென்னையிலிருந்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் உத்தரபிரதேசத்துக்குச் சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த thankgod chukuemeka ikedinobi (33) என்பவர்தான் திருமண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்து எட்டு செல்போன்கள் ஒரு லேப்டாப், 3 டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற திருமண மோசடியில் யாரும் ஏமாற வேண்டாம் என கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “திருமணம் செய்து கொள்கிறேன் என வலைவிரித்து விலை உயர்ந்த பரிசு பொருள்களை அனுப்பி வைத்திருப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பண மோசடி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிலரைக் கைது செய்திருக்கிறோம். அப்படிதான் நைஜிரீயாவைச் சேர்ந்த thankgod chukuemeka ikedinobi (33) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரின் கூட்டாளிகள் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற நம்பரிலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொண்டு பணம் இழப்பதை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க முடியும்” என்றார்.