திண்டுக்கல், கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த யுவன்சங்கரும் நவீனாவும் காதலர்கள். இந்த ஜோடி கடந்த மாதம் பழனி பெருமாள் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டு வேலைத் தேடி சென்னைக்கு புறப்பட்டனர். அதற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த புதுமண தம்பதி, செல்போன் ஆப் மூலம் வேலையைத் தேடியபோது திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு பகுதியில் உள்ள முயல் பண்ணையில் வேலை இருக்கும் தகவல் தெரிந்தது. உடனடியாக யுவன்சங்கர்,
முயல் பண்ணை உரிமையாளரான கோபி என்பவரிடம் வேலை கேட்டிருக்கிறார். சம்பளம், தங்கும் இடம் என அனைத்தையும் பேசிவிட்டு சந்தோஷமாக யுவன்சங்கரும் நவீனாவும் முயல்பண்ணைக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வந்தனர். அங்கு இருவரும் தங்கியிருந்து வேலை செய்துக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் முயல் பண்ணையில் வேலை செய்வது யுவன் சங்கருக்கும் நவீனாவுக்கும் பிடிக்கவில்லை. அதனால் திண்டுக்கல்லுக்கு திரும்பிச் செல்ல இருவரும் முடிவு செய்து கடந்த 8-ம் தேதி இரவு 9 மணியளவில் யுவன் சங்கரும் நவீனாவும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லை. செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் முயல் பண்ணையையொட்டியுள்ள விவசாய நிலம் வழியாக இருவரும் நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது முயல்பண்ணை அருகே உள்ள விவசாய நிலத்தில் தரையையொட்டி கிணறு ஒன்று இருந்திருக்கிறது. அதைக் கவனிக்காத யுவன்சங்கர், கால் தவறி தண்ணீருக்குள் விழுந்தார்.
அதை சற்றும் எதிர்பார்க்காத நவீனா, தன்னிடமிருந்த செல்போன் டார்ச் மூலம் யுவன்சங்கர் விழுந்த இடத்தை பார்த்தார். அப்போது தண்ணீருக்குள் யுவன்சங்கர் மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த் நவீனா, அய்யோ காப்பாத்துங்க என்று சத்தம் போட்டார். இரவு நேரம், ஆள்நடமாட்டம் இல்லாத விவசாய இடம் என்பதால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை. இதையடுத்து அந்த ஊரில் தனக்குத் தெரிந்த முயல்பண்ணை உரிமையாளர் கோபியிடம் விவரத்தைக் கூறிய நவீனா அவரையும் சிலரையும் கிணற்று பகுதிக்கு அழைத்து வந்தார்.
அவர்களும் யுவன்சங்கரைக் காப்பாற்ற சில முயற்சிகளைச் செய்தனர். இரவு நேரம் என்பதால் தண்ணீருக்குள் மூழ்கிய யுவன்சங்கரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கும் திருவலங்காடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்தனர். கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் யுவன்சங்கரின் சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதனால், கிணற்றிலிருந்து தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றிய தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி உள்ளே இறங்கி யுவன்சங்கரின் சடலத்தை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யுவன்சங்கரின் சடலத்தைப் பார்த்த நவீனா கதறி அழுதக் காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. நவீனாவின் கழுத்தில் யுவன்சங்கர் கட்டிய மஞ்சள் தாலியின் ஈரம் கூட காய்வதற்குள் இப்படியொரு சோகச் சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது.