யார் இந்த கூலிப்படைத் தலைவன் முத்துசரவணன்

சென்னை செங்குன்றம் அருகே உள்ள சோழவரத்தில் கூலிப்படைத் தலைவனாக செயல்பட்ட முத்துசரவணன், அவரின் கூட்டாளியான சண்டே சதீஷ் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் சம்பவத்தில் உயிரிழந்த முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகியோரின் பின்னணி அதிர்ச்சி ரகம் எனச் சொல்கிறார்கள் போலீஸார்.

சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் டிகிரி படித்தவர் முத்துசரவணன். இவரின் சொந்த ஊர் சோழவரம் அருகே உள்ள நல்லூர். காலேஜ் படிக்கும் போதே முத்துசரவணன், பேருந்தின் ரூட் தல-யாக இருந்திருக்கிறார். அப்போது அந்த பேருந்து ரூட்டில் பயணிக்கும் தான் படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளையும் ஆளுமையோடு அரவணைத்துச் சென்ற முத்துசரவணனுக்கும் இன்னொரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது நடந்த மோதலில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் முதல் தடவையாக முத்துசரவணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற அவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த குற்றச் சம்பவங்களால் கூலிப்படைத் தலைவாகியிருக்கிறார்.

கல்லூரி மாணவனான பார்த்த முத்துசரவணன், நிலத்தகராறு ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக இருந்த கோட்டைச் சாமி என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைக்குச் செல்கிறார். கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற முத்து சரவணனுக்கு அப்போது ரவுடியிஸத்தில் கோலோச்சிய சிலருடன் நட்பு கிடைக்கிறது.

கையில் கத்தி, அரிவாளை எடுத்த முத்துசரவணனுக்கும் இன்னொரு பிரபல ரவுடியான சேதுபதிக்கும் ஏரியாவில் யார் பெரிய ஆள் என்ற மோதல் ஏற்படுகிறது. அதனால் முத்துசரவணனுக்கும் சேதுபதிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்கதையாகி அடுத்தடுத்து உயிர்பலிகள் ஏற்படுகின்றன.

முத்துசரவணன் தலைமையில் ஒரு டீமும் சேதுபதி தலைமையில் இன்னொரு டீமும் அடிக்கடி மோதிக் கொண்டதால் சோழவரம் காவல் நிலைய போலீஸாருக்கு தலைவலியானது. இரண்டு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்த போலீஸார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்தனர். ஆனால் இரண்டு தரப்பினரின் மோதலுக்கு முடிவில்லாமல் போனது.

அதில் கொடூரமாக முத்துசரவணன் டீமிலிருந்த கார்த்திக் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு சேதுபதி டீமால் கொலை செய்யப்படுகிறார். அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற முத்துசரவணன் டீம் சேதுபதியின் தங்கை கணவரான பிரசாத்தை அதே ஆண்டில் கொலை செய்து பழியைத் தீர்த்துக் கொண்டது.

இப்படி இரண்டு டீம்களைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி மோதிக் கொண்டதால் சேதுபதி தனக்கு உதவியாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டான் ஒருவரின் உதவியை நாடுகிறார். அதைப் போல முத்துசரவணனும் வடசென்னையைச் சேர்ந்த சில ரௌடிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சேதுபதிக்கு குடைச்சலைக் கொடுக்கிறார். இந்தச் சமயத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவரைக் கொலை செய்த குற்றத்துக்காக முத்துசரவணன், கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

காயமடைந்த போலீஸ்

அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த முத்துசரவணன் தலைமறைவாகிவிட்டார். அதன்பிறகு கடந்த 2022-ம் ஆண்டு மடிப்பாக்கம் பகுதியில் உள்ள இடத்துக்காக தி.மு.க தரப்புக்கும் முத்துசரவணன் தரப்புக்கும் தகராறு ஏற்படுகிறது. இதில் தி.மு.க வட்டச் செயலாளராக இருந்த மடிப்பாக்கம் செல்வம், உள்ளாட்சித் தேர்தலின் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தயாராக இருந்த சமயத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதனால் அரசியல் தொடர்பான கொலை என்ற மடிப்பாக்கம் போலீஸார் விசாரித்த நேரத்தில் மடிப்பாக்கம் செல்வம் கொலையில் கூலிப்படைத் தலைவன் சோழவரம் முத்துசரவணன் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரை 2022-ம் ஆண்டு மடிப்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த வழக்கிலும் ஜாமீனில் வெளியில் வந்த முத்துசரவணன் வழக்கம் போல தலைமறைவாகிவிட்டார். இந்தச் சூழலில்தான் ரியல் எஸ்டேட் விவகாரத்தில் மாமூல் கேட்ட தகராறில் அ.தி.மு.க பிரமுகர் பாடியநல்லூர் பார்த்திபன் ஆகஸ்ட் மாதத்தில் வாக்கிங் செல்லும்போது கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்துசரவணன், சண்டே சதீஷ் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடிவந்த நேரத்தில்தான் இருவரும் சோழவரம் பகுதி வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள். முத்துசரவணன் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகளும் சண்டே சதீஷ் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகளும் உள்ளன.

சதீஷின் சொந்த ஊர் ஞாயிறு என்பதால் ஊரின் பெயர் அவருக்கு அடைமொழியாகியிருக்கிறது. இவர் மீது தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் கொலை வழக்கும் உள்ளது. தமிழகம் முழுவதும் கூலிப்படையினரை ஏவி கொலை செய்து வந்த முத்துசரவணன் போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருக்கிறார். கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில்தான் கூடுவாஞ்சேரி போலீஸாரால் பிரபல ரௌடிகளான சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு டபுள் என்கவுன்டர் நடந்திருப்பது ரௌடிகளுக்கு மரண பீதி ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *