கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளாவிய அளவில் இந்தியா 3-வது இடத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்கா முதலிடம்
கடந்த சில நாட்களாக இந்தியாவில் வைரஸ் பாதிப்பு நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதன்காரணமாக வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை வோர்ல்டோமீட்டர்ஸ் இணையம் வெளியிட்டு வருகிறது. இந்த இணையத்தின் புள்ளிவிவரபடி, வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 29 லட்சத்து 47 ஆயிரம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் இந்தியா
இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்த நாட்டில் 15 லட்சத்து 78 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 64 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
மூன்றாவது இடத்தில் ரஷ்யா இருந்தது. அந்த நாட்டில் 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று இரவு ரஷ்யாவை தாண்டி இந்தியா 3-வது இடத்துக்கு வந்தது. இந்தியாவில் 6 லட்சத்து 87 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 19,568 பேர் உயிரிழந்திருப்பதாகவும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஏறுமுகம்
ஒரு காலத்தில் ஐரோப்பிய கண்டத்தின் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீயாக கொரோனா வைரஸ் பரவியது. அந்த நாடுகளின் அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் ஐரோப்பாவில் வைரஸ் தொற்று குறைந்துள்ளது.
ஆனால் அமெரிக்கா, தென்அமெரிக்க நாடுகள், இந்தியாவில் வைரஸ் தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.