சீனாவுடன் போர் பதற்றம் அதிகரிக்கிறது புதிதாக போர் விமானங்கள், ஏவுகணைகள் வாங்க அனுமதி

புதுடெல்லி
லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறுவதும் அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடிப்பதும் தொடர்கிறது. இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளின் ராணுவங்களும் எல்லையில் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. சீனா அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எஸ்.400 ஏவுகணைகள்


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் ரஷ்யாவுக்கு சென்றார். அப்போது இந்திய விமானப்படைக்கு புதிதாக போர் விமானங்கள், ஆயுதங்கள் வாங்குவது குறித்து அந்த நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவுடன் போர் பதற்றம் நீடிப்பதால் அந்த ஏவுகணைகளை முன்கூட்டியே வழங்கும்படி அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதை ரஷ்ய அரசு ஏற்றுக் கொண்டது.

எஸ்400 ஏவுகணைகளை சீன எல்லையில் நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சீன போர் விமானங்கள், ஏவுகணைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் எஸ்400 ஏவுகணைகளை அவற்றை துல்லியமாக தாக்கி அழிக்கும்.

புதிய போர் விமானங்கள்


இந்த சூழ்நிலையில் மத்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முப்படைகளுக்காக ரூ.38,900 கோடியில் புதிதாக போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி 21 மிக்29 , 12 சுகோய்30 எம்கேஐ போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. மேலும் இந்திய விமானப்படை சேவையில் உள்ள 59 மிக் 29 போர் விமானங்களை நவீனப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பினாகா, அஸ்திரா ஏவுகணைகளை கூடுதலாக கடற்படை, விமானப்படையில் சேர்க்கவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *