3 கட்டங்களாக படைகள் வாபஸ்.. இந்தியா, சீனா ஒப்புதல்

3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளன.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. சீன ராணுவம் சுமார் 60,000 வீரர்களையும் ஆயுதங்களையும் லடாக் எல்லையில் குவித்தது. அதற்கு இணையாக இந்திய ராணுவமும் ஆயுதங்களையும் வீரர்களையும்  முன்வரிசையில் நிறுத்தியது. கடும் குளிரிலும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் காவல் காத்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன. அதன்படி இருநாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதில் இருநாடுகளின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

கடந்த 6-ம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எல்லையில் இருநாடுகளின் வீரர்களும் கட்டுப்பாட்டுடன் நடக்க உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

முதல்கட்டமாக இரு நாடுகளின் ராணுவங்களும் ஒரே நாளில் டாங்கிகள், கவச வாகனங்களை எல்லைக்கோட்டில் இருந்து வாபஸ் பெற வேண்டும்.

இரண்டாம் கட்டமாக லடாக் பான்காங் ஏரியின் வடக்கு கரை பகுதியில் நாள்தோறும் 30 சதவீத படை வீரர்களை இரு ராணுவங்களும் பின்வாங்க செய்ய வேண்டும். அடுத்த 3 நாட்களுக்கு படைகளை வாபஸ் பெற வேண்டும். இதன்படி இந்திய ராணுவ வீரர்கள், தான் சிங் தாபா நிலைக்கும் சீன ராணுவ வீரர்கள் பிங்கர் 8 நிலைக்கும் திரும்பி செல்ல வேண்டும்.

மூன்றாம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்கு கரையில் முகாமிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்கள் அவரவர் பழைய நிலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். படைகள் முறையாக வாபஸ் பெறப்படுகிறதா என்பதை இருதரப்பும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கலாம் என்றும் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “சீன ராணுவத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. எனவே படைகள் வாபஸ் பெறும் திட்டத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிப்போம். எந்த சூழ்நிலையிலும் எச்சரிக்கையாக செயல்படுவோம்” என்று தெரிவித்தன.

இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் இடையிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இருதரப்பு படைகளை வாபஸ் பெறுவது குறித்த திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.   

சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் காணொலி கருத்தரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் முதிர்ச்சிதன்மையுடன் பேசினர். எல்லைப் பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டிருப்பதை அவர்களின் முதிர்ச்சியான பேச்சு உறுதிபடுத்தியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *