எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு இந்தியா, சீனா ஒப்புதல் அளித்துள்ளன.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ வீரர்கல் அத்துமீறி நுழைய முயன்றனர்.

அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் லேசான கைகலப்பு ஏற்பட்டது.

இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இதனை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்துள்ளன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் சந்தித்துப் பேசினர். நடுவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செய்கி லாரவ் உள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் சந்தித்துப் பேசினர். நடுவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செய்கி லாரவ் உள்ளார்.

இதன்பின் கடந்த மாதம் 29-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.

அவர்களை விரட்டியடித்த இந்திய வீரர்கள், அங்குள்ள 3 முக்கிய மலைமுகடுகளை தங்கள் வசமாக்கினர். இதன்பிறகு கடந்த 7-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரி தெற்குப் பகுதியில்  உள்ள இந்திய நிலையை கைப்பற்ற சீன வீரர்கள் முயற்சித்தனர். 

4 மாதங்களாக பதற்றம்

கடந்த மே மாதம் தொடங்கி கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீற முயற்சிப்பதால்  4 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. 

கடந்த 4-ம் தேதி இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கியும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர்.  இதன்பிறகு பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதன்பிறகும் சீன வீரர்களின் அத்துமீறல் தொடர்கிறது. கடந்த 7-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரி எல்லைப் பகுதியில் இரும்பு கம்பிகள், ஈட்டிகள், கூர்மையான ஆயுதங்களுடன் குவிந்த சீன வீரர்கள், அங்கிருந்த இந்திய நிலையை கைப்பற்ற முயற்சித்தனர்.

லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.

இந்திய வீரர்கள், சீன வீரர்களை விரட்டியடித்ததால் விரக்தி அடைந்த சீன வீரர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். 

பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று  நடைபெற்ற ஷாங்காங் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர்.

இரவு 7 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நீடித்தது. 

லடாக் எல்லை நிலவரம் குறித்து இரு அமைச்சர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது:

இந்திய, சீன தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகள் பெரும் பிரச்சினையாக உருவெடுக்க அனுமதிக்கக்கூடாது.

லடாக் எல்லையில் செல்லும் இந்திய ராணுவ வாகனங்கள்
லடாக் எல்லையில் செல்லும் இந்திய ராணுவ வாகனங்கள்

பதற்றத்தை தணிக்க வேண்டும்

எல்லையில் நீடிக்கும் பதற்றம், இந்தியா, சீனாவின் நலனுக்கு உகந்தது அல்ல. இரு நாடுகளின் ராணுவமும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். எல்லையில் இடைவெளியைப் பேண வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும் .

எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்கள், நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும்.

எல்லைப் பகுதிகளில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும்.  பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

சிறப்பு பிரதிநிதிகள் மூலம் ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளின்படி இந்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

நீடித்த நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எல்லையில் அமைதியை நிலைநாட்ட நல்லெண்ண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *