இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர்.
அப்போது லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதன்படி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் 6-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்த கட்டமாக 7-ம் சுற்று பேச்சுவார்த்தை வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.
லடாக் எல்லைப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் போரிட அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை சீன செய்தியாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் லடாக் எல்லையில் சீன ராணுவம் டி-15 என்ற டாங்கிகளை குவித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் டி-90, டி72 ரக டாங்கிகளை நிலைநிறுத்தியுள்ளது.
ரஷ்ய தயாரிப்பான டி-90 டாங்கிகள் கடும் குளிர்காலத்திலும் போரிடும் திறன் கொண்டது.
இந்திய ராணுவ டாங்கிகளை, சீன டாங்கிகளால் எதிர்கொள்ள முடியாது ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து எம்.கியூ.-9 ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து 30 ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல்கட்டமாக 6 விமானங்களை அமெரிக்கா விரைவில் வழங்க உள்ளது.