இந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது

இந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது. எல்லையில் இருதரப்பினரும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 வீரர்கள், வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது.

பதற்றம் சற்று தணிந்திருந்த நிலையில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர்.

இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன்காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.

பதற்றத்தை தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதன்காரணமாக இந்தியா, சீனா போர் பதற்றம் அதிகரிக்கிறது. எல்லையில் இருதரப்பினரும் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.

இந்திய ராணுவ தளபதி நராவனே
இந்திய ராணுவ தளபதி நராவனே

இந்த பின்னணியில் ராணுவ தளபதி நராவனே 2 நாள் பயணமாக நேற்று லடாக்கிற்கு சென்றார். லடாக் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து அவர் ஆய்வு செய்து வருகிறார்.

தளபதி நாராவனே இன்று நிருபர்களிடம் கூறும்போது, “லடாக் எல்லை நிலவரம் சீரியஸாக இருக்கிறது. எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

சீனாவின் அத்துமீறல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லடாக் மட்டுமன்றி வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கிழக்கு விமானப் படை தலைமையகமான மேகாலயாவின் ஷில்லாங்கில் கடந்த புதன்கிழமை விரிவான ஆய்வு நடத்தினார்.

எல்லையில் எஸ்.எஸ்.எப். படை

கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றபோது திபெத் வம்சாவளியை சேர்ந்த எஸ்.எஸ்.எப் படை வீரர்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டனர்.

சீன பிடியில் இருந்து திபெத்தை மீட்க வேண்டும் என்ற விடுதலை வேட்கை கொண்ட எஸ்.எஸ்.எப். படை வீரர்கள், சீன வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக போரிட்டனர்.

அதன்பிறகு இப்போது எஸ்.எஸ்.எப். படை வீரர்கள் மீண்டும் லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லை பகுதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29-ம் தேதி லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றபோது அவர்களை எஸ்.எஸ்.எப்.. படை வீரர்கள் விரட்டியடித்தனர்.

பான்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் 30 முக்கிய பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது சீன படைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பான்காங் ஏரியில் சீனா மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் சீன கடல்

சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வந்தது. ஆனால் அண்மைகாலமாக சீனாவை இந்தியா பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் போர்கப்பல்களும் அங்கு முகாமிட்டுள்ளன. இது முக்கிய திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.

இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சீன விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 3 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ளார். இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர், உயரதிகாரிகளை ராஜ்நாத் சிங் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, எஸ்-400 ரக ஏவுகணைகளை விரைந்து வழங்க ரஷ்யாவை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். மேலும் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சில நாட்களுக்கு முன்பு கூறும்போது, “அண்டை நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்கிறது.

இந்த அணுகுமுறையை அந்த நாடு கைவிட வேண்டும். திபெத் விவகாரம் தொடர்பாக சீனா மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தென் சீன கடல் விவகாரம் மட்டுமன்றி திபெத் விவகாரத்தையும் அமெரிக்கா மீண்டும் கையிலெடுக்கும் என்று தெரிகிறது.

தற்போது திபெத் எல்லைப் பகுதிகளில் இருந்தே இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். எனவே அமெரிக்க அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *