இந்தியா சீனா இடையே மீண்டும் போர் பதற்றம்

இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர்.

கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

எல்லையில் பெருமளவு ஆயுதங்களையும் வீரர்களையும் இந்திய ராணுவம் குவித்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 3-ம் தேதி நேரடியாக லடாக் எல்லைக்கு சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே ராஜ்ஜிய, ராணுவரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சீன ராணுவ வீரர்கள் லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கினர்.

எனினும் சில பகுதிகளில் சீன வீரர்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
பான்காங் ஏரியில் அத்துமீறல்
குறிப்பாக பான்காங் ஏரியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து பின்வாங்க சீன ராணுவம் மறுத்து வருகிறது.

பான்காங் ஏரி

இந்த ஏரியின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்ட பான்காங் ஏரியின் ஒரு பாதி இந்தியாவிடமும் மறு பாதி சீனாவிடமும் உள்ளது.

இந்த ஏரி 8 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.இதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை. இதில் 4-வது பாகத்தின் எல்லைக்குள் சீன ரோந்து படகுகள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றன.

இந்த பின்னணியில் பான்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 29-ம் தேதி நள்ளிரவு, 30-ம் தேதி அதிகாலை நேரத்தில் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

பான்காங் ஏரிப் பகுதியின் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்ற சீனா முயற்சி செய்கிறது. இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்டவே இந்திய ராணுவம் விரும்புகிறது. அதேநேரம் இந்திய மண்ணை காப்பதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்ல.இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சுதந்திர தினத்தின்போது லடாக்கின் பான்காங் ஏரியில் தேசிய கொடியேந்தி நாட்டுக்கு மரியாதை செலுத்தி இந்திய வீரர்கள்.
கடந்த சுதந்திர தினத்தின்போது லடாக்கின் பான்காங் ஏரியில் தேசிய கொடியேந்தி நாட்டுக்கு மரியாதை செலுத்தி இந்திய வீரர்கள்.

கடந்த ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டபோது போர் பதற்றம் ஏற்பட்டது. இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் லடாக் எல்லையில் போர் பதற்றம் எழுந்திருக்கிறது.

இதற்கிடையே திபெத்தில் உள்ள ஹோட்டன் விமானப் படைத் தளத்தில் சீன விமானப் படையின் அதிநவீன ஜே-20 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் அடிக்கடி பறப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போர் பதற்றத்தை தவிர்க்க லடாக்கின் சூசல் பகுதியில் இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு கடந்த ஜூன் 30, ஆகஸ்ட் 8-ம் தேதிகளில் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. பிங்கர் பகுதி, தேப்சங், கோக்ரா, டிபிஓ பகுதிகளில் சீன வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் பான்காங் ஏரிப் பகுதியில் அத்துமீறி முன்னேற முயன்றுள்ளனர்.

இதன்காரணமாக லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் எழுந்திருக்கிறது. தற்போது நடைபெறும் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பதை உறுதியாக கூற முடியாது” என்று தெரிவித்தன.

பிரதமர் அவசர ஆலோசனை

“லடாக் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால் ராணுவரீதியாக தீர்வு காணப்படும்” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அண்மையில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

எல்லை நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், ராணுவ தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் லடாக் எல்லை நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ண மாத்தூர் நேற்று லே நகரில் இருந்து டெல்லிக்கு சென்றார்.

தென்சீன கடலில் இந்திய போர்க்கப்பல்

தென்சீன கடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வந்தது.
கடந்த மே மாதத்தில் லடாக்கில் சீனா அத்துமீற முயன்றபோதும் இந்தியா நிதானத்தை கடைப்பிடித்தது.

தற்போது லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறுவதால் தென் சீன கடலுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென் சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்திய போர்க்கப்பல்களும் அங்கு முகாமிட்டிருப்பது சர்வதேச அரங்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *