மார்ச் மாதத்தில் சிறு நூறுகள், ஏப்ரல், மே மாதங்களில் சில ஆயிரங்கள் என நிதானமாக ஓட்டத்தை தொடங்கிய கொரோனா இன்று 50 ஆயிரத்தை எட்டி தடதடக்கிறது.
நாடு முழுவதும் நேற்று 49 ஆயிரத்து 310 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இன்று 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாளைய நிலை நாமறியோம்.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் வகையில் 8 லட்சத்து 49 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 56 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 358 ஆக உயர்ந்திருக்கிறது.
வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு புதிதாக 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 57 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
குஜராத், கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரசேதம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸின் பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் இன்று வரை வைரஸின் வேகம் குறையவில்லை. வடக்கிலும் தெற்கிலும் வைரஸ் வாழ்கிறது. இந்தியர்களின் வாழ்க்கை தேய்கிறது.