இந்தியாவில் கொரோனா மருந்து பரிசோதனைக்காக 1,100 பேர் தேர்வு – வரும் 18-ல் முதல்கட்ட சோதனை

இந்தியாவில் கொரோனா மருந்து பரிசோதனைக்காக ஆயிரத்து 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


உலகம் முழுவதும் ஒரு கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. 19 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளனர்.


உலக நாடுகளை மிரள வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஒட்டு மொத்த உலக நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.


அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை மருந்து ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. மாடர்னாவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் மனிதர்களுக்கு கொரோனா மருந்தை அளித்து பரிசோதனை நடத்தி வருகின்றன.


உலக நாடுகளுக்குப் போட்டியாக இந்திய மருந்து நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் குறுகிய காலத்திலேயே சாதனை படைத்துள்ளன. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து கோவேக்ஸின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளன.


இந்த மருந்து நாடு முழுவதும் 12 மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளித்து சோதனை நடத்தப்பட உள்ளது. பல்வேறு கட்டங்களாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. முதல்கட்ட பரிசோதனைக்காக 375 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மூன்று குழுவினருக்கும் வெவ்வேறு அளவுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல்கட்ட பரிசோதனை ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது.


இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் இறுதியில் இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 750 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.


இதுகுறித்து பாரத் பயோடெக் வட்டாரங்கள் கூறும்போது, எங்களது கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக ஆயிரத்து 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 15 மாதங்களுக்குப் பிறகே புதிய மருந்து வர்த்தகரீதியாக விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தன.


வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வட்டாரங்கள் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தன. இதனை அந்த அமைப்பே மறுத்துவிட்டது. கொரோனா தடுப்பூசி மருந்துக்கு காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *