நாலு கால் பாய்ச்சலில் பாய்கிறது கொரோனா – ஒரே நாளில் 49,310 பேருக்கு வைரஸ் தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. வைரஸ் தொற்று நாள்தோறும் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து முன்னேறுகிறது. அதே வேகத்தில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.


மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் புதிதாக 49 ஆயிரத்து 310 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று 4 ஆயிரம் பேருக்கு கூடுதலாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

போக்குவரத்து போலீஸ்காரரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.


நாடு முழுவதும் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 740 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 30 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.


மகாராஷ்டிராவில் புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அந்த மாநிலத்துக்கு போட்டியாக தமிழகத்தில் 6 ஆயிரத்தை தாண்டுகிறது வைரஸ் தொற்று. ஆந்திரா, கர்நாடகாவிலும் வைரஸ் தொற்று உச்சத்தில் உள்ளது.


மகாராஷ்டிராவில் 3.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *