இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,”இந்தியா முழுவதும் ஒரே நாளில் 20,903 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சத்து 25 ஆயிரத்து 544 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,79,892 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 18,213 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து .86 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அங்கு 1,01,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 77,276 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,178 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 92,175 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 63,007 பேர் குணமடைந்துள்ளனர். 26,304 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 2,864 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 33,913, உத்தர பிரதேசத்தில் 24,825 , மேற்குவங்கத்தில் 19,819, ராஜஸ்தானில் 18,662, ஹரியாணாவில் 15,509, மத்திய பிரதேசத்தில் 14,106, பிஹாரில் 10,471, அசாமில் 7,849, ஒடிசாவில் 7,545, பஞ்சாபில் 5,784 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கேரளாவில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த மாநிலத்தில் இன்று வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது. இது கவலையளிப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.