அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 30 கொரோனா தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. 

இதில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ்-டி’ கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிட் ஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதித்து வருகிறது. 

இதேபோல ரஷ்ய அரசு நிறுவனமான கமலேயா இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ என்ற கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் இந்தியாவில் விநியோகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அமைச்சர்கள் குழு கூட்டம்

இந்த பின்னணியில் கொரோனா தடுப்புக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்துக்குப் பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வர்த்தகரீதியாக தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.   

இந்தியாவில் பரிசோதனை நடத்தப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. ஒரு தடவை போடப்படும் தடுப்பூசியை அதிகம் விரும்புகிறோம். 

எனினும் இத்தகைய தடுப்பூசி கிடைப்பது கடினமானது. இரு தடவை போடப்படும் தடுப்பூசி எதிர்பார்த்த பலனை அளிக்கும். முதல்முறை தடுப்பூசி போடப்படும்போது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும். 2-வது முறை தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்போது எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கும். 

2 தடவை தடுப்பூசிகள்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, செரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் ‘கோவிட் ஷீல்டு’ ஆகியவை 2 தடவை போடப்படும் தடுப்பூசிகள் ஆகும். ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தின்  ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி,  3 தடவை போடவேண்டிய தடுப்பூசியாகும்.  

இதர தடுப்பூசிகள் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு செய்து வருகிறது. 

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 20 கோடி முதல் 25கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

ஜன் அந்தோலன் இயக்கம்

நாடு முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. குளிர் காலமும் தொடங்க உள்ளது. இந்த காலத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் வாய்ப்புள்ளது. 

இதை தடுக்க பொதுமக்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகிய பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். 

இதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி  ‘ஜன் அந்தோலன்’ இயக்கத்தை தொடங்கிவைத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

நாடு முழுவதும் தற்போது 1,972 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இவற்றின் நாளொன்றுக்கு சராசரியாக 15 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. உலகளாவிய அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 

இந்தியாவில் உயிரிழப்பும் மிகவும் குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, “உலகம் முழுவதும் சுமார் 40 கொரோனா தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசிகள் தயாராகிவிடும். 

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் எங்களுக்கு முழுமையான புள்ளிவிவரங்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மருந்துகள், தடுப்பூசிகளை சேமித்து வைக்க நாடு முழுவதும் தற்போது சுமார் 80 ஆயிரம் குளிர்சாதன கிடங்குகள் உள்ளன. 

கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க தற்போதுள்ள குளிர்சாதன கிடங்குகளை போல 10 மடங்கு அதிகமாக குளிர்சாதன கிடங்குகளை உருவாக்க வேண்டும். 

மேலும் தடுப்பூசிகளை போட கோடிக்கணக்கில் ஊசிகள் தேவை. இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஊசி தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய ஊசி தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஸ்ரின்ஜஸ் ஆண்டுக்கு 70 கோடி ஊசிகளை தயாரிக்கிறது. இதனை 100 கோடியாக அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

மக்களுக்கு தடுப்பூசிகளை போட சுமார் 25 லட்சம் சுகாதார ஊழியர்கள் தேவைப்படுவார்கள். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *