இந்தியாவில் இதுவரை 2 கோடி பேருக்கு கொரோனா

இந்தியாவில் இதுவரை 2 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  ஒரு கோடியை தாண்டியது. இதன்பிறகு கடந்த பிப்ரவரியில் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது.  கடந்த மார்ச் மாதம் தினசரி தொற்று ஒரு லட்சமாக உயர்ந்தது. கடந்த ஏப்ரலில் தினசரி தொற்று 2 லட்சமாக அதிகரித்தது.

இந்த ஏப்ரல் இறுதி முதல் நாள்தோறும் 3.5 லட்சம் பேர் முதல் 4 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் இன்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் 3.57 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை  2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 3.2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.  நாடு முழுவதும் 34 லட்சத்து 47 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 48,621 பேர், கர்நாடகாவில் 44,438 பேர், உத்தர பிரதேசத்தில் 29,052 பேர், கேரளாவில் 26,011 பேர், தமிழகத்தில் 20,952 பேர், ஆந்திராவில் 18,972 பேர், டெல்லியில் 18,043 பேர், மேற்குவங்கத்தில் 17,501 பேர், ராஜஸ்தானில் 17,296 பேர், சத்தீஸ்கரில் 15,274 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 10 மாநிலங்களில் மட்டும் 72 சதவீத தினசரி தொற்று பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *