இந்தியாவில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வைரஸ் தொற்று சில நூறுகளாக இருந்தது. இப்போது நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 34 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 பேர் குணமடைந்துள்ளனர். 3.4 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 25 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 369 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த மாநிலத்தில் 97 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவில் வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.