உலகளாவிய அளவில் ஒன்றரை கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 9 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 40 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிர்பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்து 21 லட்சம் கொரோனா நோயாளிகளுடன் பிரேசில் 2-ம் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் நாள்தோறும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், “கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 11 லட்சத்து 92 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 7.5 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 648 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 28 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது.