இந்தியாவில் ஒரே நாளில் 22 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 987 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தெலங்கானா, கர்நாடகாவில் தலா 25 ஆயிரம் பேர், மேற்குவங்கத்தில் 22 ஆயிரம், ராஜஸ்தான், ஆந்திராவில் தலா 20 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 20 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.