நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் நாள்தோறும் காலையில் கொரோனா வைரஸ் புள்ளிவிவரம் வெளியிடப்படுகிறது. இதன்படி இன்று காலையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 487 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேரும், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேரும், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 மாநிலங்களில்தான் புதிய வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது.