இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 498 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் சில நூறுகளாக இருந்த வைரஸ் தொற்று ஏப்ரலில் சில ஆயிரமாக இருந்தது. கடந்த இரு மாதங்களாக வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.


மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 460 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்து 11 ஆயிரத்து 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 553 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 23 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 798 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 3-ம் இடத்தில் உள்ள டெல்லியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 740 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கர்நாடகா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் புதிய வைரஸ் தொற்று 100-க்குள் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் புதிதாக 400-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *