இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக புதிய வைரஸ் தொற்று 28 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று மேலும் ஆயிரம் கூடியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181 ஆக உய்ரந்துள்ளது. இதில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோரின் எண்ணிக்கை 63.02 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 582 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும் புதிய வைரஸ் தொற்று உயர்ந்து வருவதும் உயிரிழப்பு கூடி வருவதும் கவலை அளிக்கிறது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 665 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 பேரும் டெல்லியில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 346 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.