ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா; 608 பேர் பலி

நாடு முழுவதும் ஒரே நாளில் 25,850 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 608 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 கட்ட ஊரடங்கு


கடந்த மார்ச் இறுதியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியது. இதை கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது நாள்தோறும் ஏற்படும் புதிய வைரஸ் தொற்று சில நூறுகளில் இருந்தது.
முதல் 2 கட்ட ஊரடங்கு கண்டிப்புடன் அமல் செய்யப்பட்டது. 3-ம் கட்ட ஊரங்கின்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 4-ம் கட்டத்தின்மேலும் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டது.

கடந்த மே 31-ம் தேதி 4-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்தது. அதன்பின் 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஊரங்கில் இருந்து வெளியேறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த ஜூன் மாதத்தை தொடர்ந்து நடப்பு ஜூலை மாதத்திலும் அதே நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ரயில், பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு நீடிக்கிறது. உள்நாட்டு விமான சேவை இயக்கப்படுகிறது. வெளி நாட்டு விமான சேவை இதுவரை தொடங்கப்படவில்லை.

வேகமெடுத்த வைரஸ் பரவல்


ஊரடங்கு அமலில் இருந்தபோது புதிய வைரஸ் தொற்று குறைவாக இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது வைரஸ் பரவல் வேகம் எடுத்தது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
முதலில் சில நூறுகள், பின்னர் ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என படிப்படியாக அதிகரித்து இன்று புதிதாக 24,850 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 லட்சம் பேர் குணமடைந்தனர்

இதில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 83 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 608 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 19 ஆயிரத்து 268 ஆக உயர்ந்திருக்கிறது.


குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் புதிய வைரஸ் தொற்றும் உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்திருப்பது கவலையளிக்கிறது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *