‘மலபார்’ போர் பயிற்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் ற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் பயிற்சிக்கு ‘மலபார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பான் கடற்படையும் இணைந்தது. இந்த ஆண்டு மலபார் போர் பயிற்சி வங்கக் கடலில் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின. ‘குவாட்’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி நாடுகள் சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றன.
இந்த பின்னணியில் நடப்பாண்டு ‘மலபார்’ போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்க உள்ளதால், இது ‘குவாட்’ கூட்டணியின் போர் பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடல்சார் பாதுகாப்பில் நட்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு வலுவடைந்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ‘மலபார்’ போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கிறது.
குவாட் கூட்டணி நாடுகள் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுதிபூண்டுள்ளன. இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் சர்வதேச விதிகளின்படி சுதந்திரமான கடல் போக்குவரத்தை குவாட் நாடுகள் உறுதி செய்யும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஐந்தரை மாதங்களுக்கும் மேலாக போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் குவாட் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து போர் பயிற்சியில் பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.