உலகளாவிய அளவில் இந்தியாவில் 12 சதவீத கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் ஒரு கோடியே 28 லட்சத்து 56 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 67 ஆயிரத்து 913 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவிய பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 33 லட்சத்து 55 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே லட்சத்து 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் நாள்தோறும் தோராயமாக 50 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 18 லட்சத்து 41 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 71 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
இந்தியாவில் கடந்த 9 நாட்களாக நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் கூறுகையில், சர்வதேச அளவில் நாள்தோறும் புதிதாக ஏற்படும் வைரஸ் தொற்றுகளில், உலகளாவிய அளவில் இந்தியாவில் 12 சதவீத கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.