பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா, அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா, அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. சீனாவுக்கு அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். 

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் 2 நாள் பயணமாக இன்று முன்தினம் டெல்லி வந்தனர். முதல் நாளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இதேபோல அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். 

அமைச்சர்கள் சந்திப்பு

இதன்தொடர்ச்சியாக அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவுத்  துறை அமைச்சர்கள், இந்திய பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லியில் இன்று ஒன்றாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாதுகாப்புத் துறை சார்ந்த அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பிஇசிஏ) மிகவும் முக்கியமானது. 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதன்விளைவாக இன்று பிஇசிஏ ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள்.

செயற்கைக்கோள் புகைப்படம்

இதன்மூலம் செயற்கைக்கோள் புகைப்படங்கள், சர்வதேச கடல், வான்வழி போக்குவரத்து குறித்த தகவல்களை இருநாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும். இந்த துறையில் இந்தியாவுக்கு தேவையான தொழில்நுட்பங்களை அமெரிக்கா வழங்கும். 

இதன்மூலம் எதிரி நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், படைகளின் நடமாட்டம் குறித்த துல்லியமான விவரங்களை இந்தியா பெற முடியும். இந்த தகவல்களின் மூலம் எதிரி நாடுகளின் இலக்குகளை இந்திய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள் மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

குவாட் கூட்டணி

பசிபிக் படல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளன. குவாட் என்றழைக்கப்படும் இந்த கூட்டணியை வலுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக  பிஇசிஏ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மிக நெருங்கிய நட்பு நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.  அந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

மேலும் புவிஅறிவியல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், அஞ்சல் சேவை ஒப்பந்தம், ஆயுர்வேதா- புற்றுநோய் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவையும் கையெழுத்தாகின.  இந்தியா, அமெரிக்கா இடையே ஒட்டுமொத்தமாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

4 அமைச்சர்கள் பேட்டி

இந்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சர்கள் மார்க் எஸ்பர், மைக் பாம்பியோ ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பசிபிக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இதன்படி இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த  பிஇசிஏ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சர்வதேச சட்டங்களின்படி சுதந்திரமான கடல் வழி போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இந்திய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெறுவார். இதேபோல இந்திய பெருங்கடல் தகவல் மையத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் முக்கிய அங்கம் வகிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் கூறும்போது, “உலகின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு இந்திய, அமெரிக்க உறவு மிகவும் முக்கியமானது. பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு அரணின் முக்கிய தூணாக இந்தியா விளங்குகிறது” என்று தெரிவித்தார்.

சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதாவது:

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் அந்த வீரர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்தினோம். இந்தியாவின் இறையாண்மை, சுதந்திரத்தை பாதுகாப்பதில் அமெரிக்கா துணை நிற்கும். 

சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகரீதியில் செயல்படவில்லை. அந்த கட்சியின் செயல்பாடுகளை உலகம் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீனா மட்டுமன்றி ஜனநாயகம், சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த சக்திக்கும் எதிராகவும் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசிய அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசிய அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர்.

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக போர் பதற்றம் நீடிக்கிறது. இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் அமெரிக்கா துணை நிற்கும் என்று அமைச்சர் மைக் பாம்பியோ உறுதி அளித்திருப்பதன் மூலம் சீனாவுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியபோது, “சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் கைகோத்து செயல்படும். அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தகவல்களை பகிர்ந்து கொள்ளும். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இரு நாடுகளும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என்று தெரிவித்தார்.

பிரதமருடன் சந்திப்பு

அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அமைச்சர்கள் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றனர். இலங்கை பயணத்துக்குப் பிறகு இருவரும் மாலத்தீவுக்கு செல்கின்றனர்.

இலங்கை, மாலத்தீவு நாடுகளின் துறைமுக திட்டங்களில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகளுக்கு அமெரிக்க அமைச்சர்கள் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன்பின் இருவரும் இந்தோனேசியா செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *