எல்லையில் படைகளை வாபஸ் பெற வேண்டும்.. சீனாவிடம் இந்தியா கண்டிப்பு

எல்லையில் படைகளை வாபஸ் பெற வேண்டும்.. சீனாவிடம் இந்தியா கண்டிப்பு உடன் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதை அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்துள்ளது.

சீந வீரர்களின் அத்துமீறல் முயற்சிகளால் இந்தியா, சீனா இடையே கடந்த நான்கரை மாதங்களுக்கும் மேலாக போர் பதற்றம் நீடிக்கிறது. கடந்த 10-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர்.

அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராணுவ உயரதிகாரிகள் சந்திப்பு

இதன்படி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நேற்று லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதியான மோல்டாவில் சந்தித்துப் பேசினர். இந்திய ராணுவ தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனனும் பங்கேற்றனர்.

முதல்முறையாக மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவாவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

சீன ராணுவ தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பிராந்திய கமாண்டர் மேஜர் ஜெனரல் லியூ லின் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 9 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்தது.

எல்லையில் பதற்றத்தை தணிக்க ஏற்படுத்தப்பட்ட 5 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் விரிவாக விவாதம் நடத்தினர்.

அப்போது லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் சீன படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய தரப்பில் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டது.

எதற்கும் தயார் நிலை

இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே ஏற்கெனவே 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசி சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் நடைபெற்றது. ஆனால் அதன்பிறகும் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. சீன ராணுவத்தின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளது.

சீன அச்சுறுத்தலை சமாளிக்க எல்லையில் திபெத் வம்சாவளியை சேர்ந்த இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் மலைப்பிரதேசத்தின் குளிரை தாங்கக்கூடியது.

இவர்கள் மூலமாக சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அவ்வப்போது அதிர்ச்சி அளித்து வருகிறது. கிழக்கு லடாக்கின் 6 மலை முகடுகளை இந்திய ராணுவம் நேற்று தனது வசமாக்கி சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்திய விமானப் படையில் அண்மையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. ரஃபேல், மிராஜ், சுகோய் ரக போர் விமானங்கள் இணைந்து லடாக் எல்லையில் ரோந்து சுற்றி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *