சீனாவுக்கு இந்தியா பதிலடி

சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது 1914-ம் ஆண்டில் அப்போதைய சீன மன்னரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. 

இது மக்மோகன் எல்லைக்கோடு என்றழைக்கப்படுகிறது. 

கடந்த 1959-ம் ஆண்டில் அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய், அன்றைய இந்திய பிரதமர் நேருவுக்கு கடிதம் அனுப்பினார். 

அதில், மக்மோகன் எல்லைக்கோடு ஆங்கிலேயரின் ஆதிக்க எல்லைக் கோடு. அது சட்டபூர்வமானது கிடையாது. அந்த எல்லைக்கோட்டை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார். 

மேலும் புதிதாக ஒரு எல்லைக்கோடு வரைபடத்தையும் சூ என்லாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். 

அதில் லடாக், அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடியது. 

இந்த எல்லைக்கோட்டை இந்தியா அப்போதே ஏற்கவில்லை. இதன்பின் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் மூண்டது.

தற்போது லடாக் எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக போர் பதற்றம் நீடிக்கிறது. 

கடந்த 30-ம் தேதி இந்தியா, சீனா இடையே ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அப்போது கடந்த  1959-ல் அன்றைய சீன பிரதமர் சூ என்லாய் ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டை ஏற்குமாறு சீனா வலியுறுத்தியது. இதை இந்தியா ஏற்கவில்லை. 

லடாக்கில் 33,000 கி.மீ. பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது. 

அந்த இடமும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “வரும் 12-ம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதில் சீனா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

சீனாவின் ஒருதலைப்பட்சமான எல்லைக்கோடு வரையறையை ஏற்க முடியாது” என்று தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *