எந்த படையாலும் இந்திய வீரர்களை தடுக்க முடியாது

எந்த படையாலும் இந்திய வீரர்களை தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரிவித்துள்ளார்.

லடாக் எல்லை பிரச்சினையால், கடந்த நான்கரை மாதங்களாக இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. லடாக் எல்லை நிலவரம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற லோக்சபாவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து எல்லை பிரச்சினை குறித்து ராஜ்ஜியசபாவில் இன்று அவர் விளக்கம் அளித்தார்.

“இந்தியா, சீனா எல்லை பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ. பரப்பரளவை சீனா ஆக்கிரமித்துள்ளது.

மேலும் இந்தியாவுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 90,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

சீனாவுக்கு ஆர்வமில்லை

எல்லை பிரச்சினை சிக்கலானது. இதற்கு தீர்வு காண பொறுமை அவசியம். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதை இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இடைக்கால தீர்வாக இப்போதைய எல்லையில் அமைதியை கடைப்பிடிக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இதுதொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

குறிப்பாக கடந்த 1993, 1996-ம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி எல்லையில் படைகளைக் குவிக்கக்கூடாது என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த 1990 முதல் 2003 வரை எல்லை வரையறை தொடர்பாக இருதரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்பிறகு பேச்சுவார்த்தையில் சீனா ஆர்வம் காட்டவில்லை.

கடந்த ஏப்ரலில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம், வீரர்களையும் ஆயுதங்களையும் குவிப்பது தெரியவந்தது. கடந்த மே மாதம் இந்திய ராணுவ வீரர்களின் ரோந்து பணியில் சீன வீரர்கள் குறுக்கிட்டனர். இதன்காரணமாக மோதல் ஏற்பட்டது.

கடந்த மே மாத மத்தியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்தது. குறிப்பாக கோங்கா லா, கோத்ரா, பான்காங் ஏரியின் வடக்கு கரையில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி தகுந்த பதிலடி கொடுத்தனர்.

அமைதியை விரும்புகிறோம்

கடந்த ஜுன் 6-ம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இப்போதைய எல்லை கோட்டை மதித்து நடக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால் கடந்த ஜூன் 15-ம் தேதி சீன வீரர்கள் எல்லையில் மீண்டும் அத்துமீற முயன்றனர். நமது வீரர்கள், தங்களது வீர, தீரத்தால் சீன வீரர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் சீன தரப்புக்கு மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அண்டை நாடுகளுடன் இந்தியா அமைதியை விரும்புகிறது. அதேநேரம் எல்லையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம். இதில் யாருக்கும் சந்தேகம் எழ வேண்டிய அவசியம் இல்லை.

எல்லையில் இந்திய வீரர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றனர். எனினும் இந்திய மண்ணை காக்க அவர்கள் தங்கள் வீர, தீரத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

இப்போதைய எல்லைக் கோட்டை மாற்றக்கூடாது. எல்லையில் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது. ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும். இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் சீனாவின் செயல்பாடுகள் ஒப்பந்தங்களை மதிப்பதாகத் தெரியவில்லை.

லடாக் எல்லையில் சவால்

கடந்த 4-ம் தேதி சீன பாதுகாப்பு துறை அமைச்சரை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினேன். இதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 10-ம் தேதி சீன வெளியுறவு அமைச்சரை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு எட்டப்பட்டது. அவற்றை சீன தரப்பு முழுமனதுடன் அமல்படுத்த வேண்டும்.

வீரமே வெற்றிவாகை சூடும். நமது வீரர்கள், வீரத்தின் சின்னமாக வாழ்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லைக்கு நேரில் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். 130 கோடி இந்தியர்களும் ராணுவத்துக்கு பக்கபலமாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.

லடாக் எல்லையில் சவாலை எதிர்கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். எனினும் எந்தவொரு சவாலையும் நமது வீரர்கள் எதிர்கொள்வார்கள். லடாக் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்களை எந்த படையாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *