லடாக்கில் போருக்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்

லடாக்கில் போருக்கு தயார் நிலையில் இந்திய ராணுவம் உள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக ராணுவ வீரர் பழனி உள்பட 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சீன தரப்பில் 40 முதல் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்துள்ளன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லையில் அமைதியை ஏற்படுத்த 5 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கூடாரங்கள்.
லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கூடாரங்கள்.

ராணுவ, ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் லடாக் எல்லையில் நிலைமை சீராகவில்லை. தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.

லடாக்கில் தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த குளிர் காலத்தில் இரவில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைய வைக்கும் குளிர் நிலவும்.

அப்போது இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்து பின்வாங்கிவிடுவார்கள் என்று சீன ராணுவ வட்டாரங்கள் கூறிவந்தன.

ஆனால் இந்திய ராணுவ வீரர்கள், லடாக் எல்லைப் பகுதிகளில் உறைய வைக்கும் கடும் குளிரில் போருக்கு தயார் நிலையில் உள்ளனர். இது சீன ராணுவத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக சீன ராணுவ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

எல்லையில் 50,000 சீன வீரர்கள்

“சீன ராணுவத்தை சேர்ந்த சுமார் 50,000 வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இணையாக இந்திய வீரர்கள் லடாக் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

பான்காங் ஏரியின் முக்கிய மலைமுகடுகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.சுமார் 5,800 மீட்டர் உயர மலைமுகடுகளில் உறையவைக்கும் குளிரில் இந்திய வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

சீன வீரர்கள் பள்ளத்தாக்கு பகுதிகளில் குவிந்துள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை இந்திய ராணுவ வீரர்களால் எளிதாக கண்காணிக்க முடியும்.

இந்திய ராணுவ தரப்பில் டி-90, டி72 டாங்கிகள் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரிலும் இந்த வகை டாங்கிகள் மூலம் இந்திய வீரர்களால் போரிட முடியும்.

வீரர்களுக்கு தேவையான குளிர் தாங்கும் உடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்குவதற்காக சிறப்பு கட்டுமான அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த அறைகள் குளிர் பாதிக்காத வகையில் வெப்ப அறைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள், வெடிபொருட்கள்

வீரர்களுக்கு தேவையான சத்துள்ள உணவுகள் வழங்கப்படுகின்றன. சுமார் 40 நாட்கள் போருக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கையிருப்பில் உள்ளன. தேவையான எரிபொருளும் உள்ளது.

சீனாவின் ஹோடன் விமானப் படைத் தளம் லடாக் எல்லைக்கோட்டில் இருந்து 320 கி.மீ. தொலைவில் உள்ளது. லே நகரில் உள்ள இந்திய விமானப் படைத் தளம் எல்லைக் கோட்டில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது.

தவ்லத் பெக் ஓல்டியில் உள்ள சிறிய அளவிலான இந்திய விமானப் படைத் தளம் எல்லையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அனைத்து வகையிலும் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளது” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக்கில் பணியாற்றும் ராணுவ மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் கூறும்போது, “நெருப்பு மற்றும் சீற்றம் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மலைப்பகுதியில் போரிடும் திறன் பெற்றவர்கள். எல்லைக்கோடு பகுதிக்கு வீரர்களையும் ஆயுத தளவாடங்களையும் எளிதில் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்திய ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

கதறி அழும் சீன வீரர்கள்

சில நாட்களுக்கு முன்பு சீன சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அதில் இந்திய எல்லைக்கு வாகனத்தில் அனுப்பப்பட்ட சீன வீரர்கள், ராணுவ கீதத்தை பாடுகின்றனர்.

ராணுவ கீதத்தை பாடும்போதே சீன வீரர்கள் அனைவரும் கதறி அழுகின்றனர். சிறிது நேரத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

எனினும் வீடியோ பதிவு உலகம் முழுவதும் பரவிவிட்டது. சர்வதேச ஊடகங்கள் சீன ராணுவத்தை கேலி, கிண்டல் செய்து வருகின்றன. இந்திய வீரர்களுக்கு பயந்து சீன வீரர்கள் கதறி அழுகின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதை மறுத்துள்ள சீன ராணுவம், குடும்பத்தைப் பிரிந்து எல்லைக்கு செல்வதால் சீன வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனர் என்று மழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *