கடந்த 1999-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரில் மிக் 23பிஎன் ரக போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிறகு அந்த விமானம் படையில் இருந்து விலக்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் விமானவியல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு, மிக் 23பிஎன் போர் விமானம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. விமானத்தின் மூலம் போர் விமான கட்டுமானம் குறித்து மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் கம்பீரமாக நிற்கும் மிக் 23பிஎன் போர் விமானம் ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டிருக்கிறது. விளம்பரத்தில் விமானத்தின் விலை ரூ.9.9 கோடி என்றும் மிகச் சிறந்த போர் விமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஓஎல்எக்ஸ் இணைய நிர்வாகத்துக்கு தெரியவந்தவுடன் விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டது.
இதுகுறித்து அலிகர் பல்கலைக்கழகம் கூறும்போது, பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சர்தார் படேல் ஒற்றுமை சிலை ஓஎல்எக்ஸில் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது கார்கில் போர்விமானம் விற்பனைக்கு வந்திருக்கிறது. அடுத்து என்னவெல்லாம் விற்பனைக்கு வருமோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.