வீட்டு விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி…

வீட்டில் வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் வீடுகளிலேயே விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தக்கூடாது. ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்று தமிழக அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து இல. கணபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனிமனித இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள்
சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர்.

வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணிலான விநாயகர் சிலையை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம்.

ஆனால் சென்னை மெரீனா கடற்கரையில் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆணையர்கள் தினகரன், அருண் ஆகியோர் கூட்டத்துக்கு தலைமை வகித்தனர்.

பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் அறிவுரை கூறப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கூறும்போது, போலீஸாரின் கட்டுப்பாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.

புதுச்சேரி அரசு அறிவிப்பு


விநாயகர் சதுர்த்தி தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

“சிறு சிறு கோயில்களில், விநாயகர் சிலை புதிதாக வைத்து வழிபடக் கூடாது. கோயில்களில் கொட்டகை அமைக்கக் கூடாது. கூட்டம் கூடக் கூடாது. 5 பேருக்கு மேல் கூடக் கூடாது.

பொது இடங்களில் சிலை வைக்காதது போலவே, சிறு சிறு கோயில்களில் பூஜை நடத்துவதாகக் கூட்டம் கூட்டுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கோயில்களில் பூஜைகளின்போது, உபயதாரர் மண்டகப்படிதாரர் ஆகியோர் கலந்து கொள்ளலாம். அதுவும் 5 பேருக்கு மேல் கூடாமல் இருக்க வேண்டும். இந்த கூட்டத்தையும் தவிர்த்தால் சிறப்பானது என்றும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *