ஈரான் அணு விஞ்ஞானி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
வளைகுடா நாடான ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன்காரணமாக ஈரான் மீது ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனினும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் நட்பு பாராட்டி வருகின்றன.
இந்த பின்னணியில் ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவரது தலைமையில்தான் ஈரானில் அணு குண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அணு விஞ்ஞானியை இஸ்ரேல் உளவாளிகள் கொலை செய்திருப்பதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரியில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ராணுவ மூத்த தளபதி சுலைமானி உயிரிழந்தார். அப்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் எழுந்தது.
தற்போது அணு விஞ்ஞானி கொலையில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் மீது ஈரான் பழிசுமத்தியுள்ளது. எனவே ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
இராக், கத்தாரில் அமெரிக்க ராணுவ, விமானப்படைத் தளங்கள் அமைந்துள்ளன. அந்த தளங்கள் மீது ஈரான் மறைமுகமாக தாக்குதல் நடத்தலாம். ஈரான் கடல் பகுதி வழியாக வரும் அமெரிக்க சரக்கு கப்பல்களை ஈரான் கடற்படை சிறைபிடிக்கலாம். ஈரானுக்கு ரஷ்யா, சீனா ஆதரவு அளிப்பதால் பிரச்சினை பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.