கேரளா, கர்நாடகாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐ.நா. சபை எச்சரிக்கை

கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, கடந்த 2014-ம் ஆண்டில் சிரியா, இராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உலகின் கவனத்தை ஈர்த்தது. இராக்கில் முகாமிட்ட அமெரிக்க ராணுவம், சிரியாவில் முகாமிட்ட ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகளால் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமிருந்த பகுதிகள் படிப்படியாக மீட்கப்பட்டன.

எனினும் இராக், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அந்த அமைப்பு தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-காய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் குறித்த ஐ.நா. சபையின் 26-வது அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் ‘விலயா ஆப் ஹிந்த்’ என்ற பெயரில் இந்திய துணை கண்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கால் பதித்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அந்த அமைப்பில் இணைந்து உள்ளனர். குறிப்பாக இந்தியாவின் கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் ஏராளமானோர் இணைந்து பதுங்கி வாழ்கின்றனர்.


கடந்த 2014-ம் தொடங்கப்பட்ட அல்காய்தாவின் இந்திய துணை கண்ட அமைப்பின் தலைவராக ஆசிம் உமர் செயல்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு பழிவாங்க அதன் புதிய தலைவர் ஒசாமா முகமது சதி திட்டங்களை தீட்டி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அபு காலித்.  இவர் கேரளாவை சேர்ந்தவர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அபு காலித். இவர் கேரளாவை சேர்ந்தவர்.


இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். சார்பில் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதில், அந்த தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் அந்த தொலைக்காட்சி அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.


கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து சிரியா, இராக், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர் என்று இந்திய உளவு அமைப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. சபையும் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *