இந்தியா வருகிறது இஸ்ரேல் புலனாய்வு குழு

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இஸ்ரேல் புலனாய்வு குழு இந்தியா வருகிறது.

இந்திய, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 29-வது ஆண்டு விழா டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது தூதரகம் அருகே சில மீட்டர் தொலைவில் சக்தி குறைந்த குண்டு வெடித்தது. 

சம்பவ இடத்தில் டெல்லி போலீஸின் சிறப்பு புலனாய்வு குழு, என்ஐஏ, என்எஸ்ஜி படைகளை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். தூதரகம் அமைந்துள்ள சாலையின் நடுவே உள்ள பூந்தொட்டியில் குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

முதல்கட்ட விசாரணையில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை பயன்படுத்தி குண்டு தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குண்டு வெடித்த பகுதியில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்பு இடத்தின் அருகே ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒன்றரை பக்க கடிதத்தின் மூலம் குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த்  என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

“ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, ஈரான் அணு விஞ்ஞானி பக்ரிசாதே ஆகியோரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டை வெடிக்க செய்கிறோம். இது சிறிய முன்னோட்டம். இன்னும் பல்வேறு தாக்குதல்களை நடத்துவோம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத குழு இதுவரை அறியப்படாத அமைப்பாகும். விசாரணையை திசை திருப்புவதற்காக தீவிரவாதிகள் இந்த பெயரை பயன்படுத்தியுள்ளனரா, இல்லை இந்த பெயரில் புதிய தீவிரவாத அமைப்பு உருவாகியுள்ளதா என்பது குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. 

இஸ்ரேல் தூதரகம் அருகே அமைந்துள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களின் பதிவை போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய 2 பேர், வாடகை காரில் இருந்து இறங்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாடகை கார் ஓட்டுநரையும் சந்தேகத்துக்குரிய 2 மர்ம நபர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லி முழுவதும் ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

குண்டுவெடித்த நேரத்தில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் 45 ஆயிரம் பேர் செல்போன்களில் பேசிக் கொண்டிருந்தனர். ஓலா, உபேர் வாடகை கார்களை முன்பதிவு செய்தவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஸ்கெனாசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினார்.

இதற்கு முன்பு கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இதில் தூதரக ஊழியர் ஒருவரின் மனைவி, ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அப்போது ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

தற்போதைய குண்டுவெடிப்பின் பின்னணியிலும் ஈரான் உள்ளதாக இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் குற்றம் சாட்டியுள்ளது. மொசாட் உளவுத் துறை நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விரைவில் டெல்லி வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி தூதரக குண்டுவெடிப்பை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *