குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 3 ஆண்டுகளில் தயாராகும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு 2 ஏவுதளங்கள் உள்ளன. இங்கிருந்தே ராக்கெட் ஏவப்பட்டு விண்வெளியில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு வசதியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் 3-வது ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜா ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருந்தார். அதற்கு இஸ்ரோ பதில் அளித்துள்ளது.
“தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, குலசேகரன்பட்டினத்தில் இஸ்ராவின் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2,376 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. நிலத்தை முழுமையாக தமிழக அரசு ஒப்படைத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கும். 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்து ஏவுதளம் தயாராகும்” என்று இஸ்ரோ பதில் அளித்துள்ளது.